Friday, July 25, 2025

இரங்கல் கடிதம்

ஒரு முடிந்துபோன தொடக்கம் ...
========================

மண்ணில் விழுவதற்கு முன்பே
மாய்ந்து போனவனே
மரணம் என்பது உன் பெயரோ ?

மலர்ந்ததும் உதிர்வதில்லை
மலர்கள்
மலரும் முன்னரே உதிர்ந்து விட்டாயே

ஏக்கம் தான் ...

உன்னை
ஈன்றவளின் முகத்தை கூட தரிசிக்க
கொடுப்பினை இல்லை

வருத்தம் தான்...

வெளிச்சத்தின் முகவரி கூட அறிய
வாய்ப்பே இல்லாமல்
இருளிலேயே முடிந்து போனது - உன்
சகாப்தம் ....

இருளை மட்டுமே நீ நேசித்திருப்பாய் கவலைப்படாதே
இருளானது தான்
இந்த
இழிவான சமுதாயமும் ...

மண்ணாள பிறந்த நீ
மண்ணினுள்
மாய்ந்து போனாய் ...

கனக்கிறது நெஞ்சம்...

ஆறறிவு படைத்த
மிருகங்களுக்கு இடையே
வாழ்வதை விட
இறந்து - நீ
புனிதன் ஆனாய் ...


உன் தாயை
ஒரு கோடி கனவுகள்
சுமந்திட செய்தவன் நீயே ...

உன் இறப்பினால்
அவளின் சந்தோசத்தை வேரோடு
புதைத்தவனும் நீயே ...

ஜனனமும் மரணமும்
ஒரே பொழுதில்
அரங்கேறிவிட்டது - உன்
வாழ்வில்...

கருவறையில் இருந்த போதே
கல்லறை கட்டியவனா நீ ?

எழுதபடாத உன் சரித்திரத்தை
எண்ணி வருந்துவதா!

இல்லை

பழி பாவம் நிறைந்த
பாவ பூமியில்
அகப்படாமல் விடுதலை அடைந்தாய் என்று
எண்ணி மகிழ்வதா

இருளில் தொடங்கி
இருளிலேயே
இன்பமாய் முடிந்தது - உன்
இதிகாசம் ....


மரணத்திற்கு
வயதில்லை இருந்தாலும் - உன்
மரணத்தின்
வயது ஏற்க முடியாததே !

தொடங்கும் முன்பே முடிந்து போன
உன் வாழ்க்கை
எண்ணி வருந்துவதால்
உன் இறுதி ஊர்வலத்தில்
இனங்காமலே
பயணிக்கின்றது - என்
மனசு ...

இருளை வென்று
இறைவனடி சேர்கிறாய்
இனி எங்கு அவதரிப்பாய்
இந்த உலகம் ஆள ..?

2 comments: